கோடை விடுமுறை முடிந்து மீண்டும் சொந்த ஊருக்குப் புறப்பட்டதால் பேருந்துகள், ரயில்களில் ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது. பள்ளிகளில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வெளியூர்களிலிருந்து ஏராளமானோர் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு வந்தனர். கோடை விடுமுறை ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்து, திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
இதனால், தஞ்சாவூர் பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையத்திலும் வழக்கத்தைவிட ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அதிகமாக இருந்தது. ரயில்களில் அமர இடம் கிடைக்காமல் ஏராளமான பயணிகள் நின்றுகொண்டே பயணம் செய்தனர். இதேபோல, பேருந்துகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. கடைவீதிகளிலும் பள்ளிகளுக்குச் செல்வதற்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காகவும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.