தஞ்சாவூர்: பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அடங்கல் தர மறுப்பு என புகார்

57பார்த்தது
தஞ்சாவூர்: பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அடங்கல் தர மறுப்பு என புகார்
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அடங்கல் தர மறுப்பதாக தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் புகார் எழுப்பப்பட்டது. கோட்டாட்சியர் செ. இலக்கியா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்திய கருத்துகள்: அம்மையகரம் ஏ.கே.ஆர். ரவிச்சந்திரன்: மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் கோரும் விவசாயிகளுக்காக விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், குடும்ப அட்டை, கணினி சிட்டா, கிராம நிர்வாக அலுவலர் அடங்கல் சான்று, ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவை இணைக்க வேண்டும் என வேளாண் துறையினர் கூறுகின்றனர். 

ஆனால், வயல்களில் தண்ணீர் வடிந்துவிட்டது எனக் கூறி விஏஓக்கள் அடங்கல் தர மறுக்கின்றனர். கோட்டாட்சியர்: அடங்கல் வழங்குமாறு விஏஓக்களுக்கு அறிவுறுத்தப்படும். தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: வேளாண் பொறியியல் துறை மூலம் வாடகைக்கு வழங்கப்படும் டிராக்டர்களுக்கு டீசல் இல்லாததால் இயக்க முடியாமல் கிடக்கிறது. இதனால், நிலக்கடலை, உளுந்து உள்ளிட்ட பயிர் சாகுபடிகளைத் தொடங்க முடியவில்லை. எனவே, டீசல் ஏற்பாடு செய்து தர வேண்டும். கூத்தூர் கே.எம். ரெங்கராஜன்: நடுப்படுகையில் காட்டுப்பன்றிகளால் அறுவடைக்கு தயார் நிலையிலுள்ள நெற்பயிர்கள் சேதமடைந்து வருகின்றன. கோட்டாட்சியர்: காட்டுப்பன்றிகளைத் தடுக்க மருந்து வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி