தஞ்சாவூர் அருகே அம்மாபேட்டையைச் சேர்ந்த கே. சிதம்பரம் (72) தற்போது சென்னை மயிலாப்பூரில் வசித்து வருகிறார். இவருக்கும் அம்மாபேட்டையில் மளிகைக் கடை நடத்தி வரும் அதே பகுதியைச் சேர்ந்த பி. கே. மோகன்தாஸுக்கும் (48) கடந்த 2014 ஆம் ஆண்டில் நட்பு ஏற்பட்டது. அப்போது, சிதம்பரத்திடம் மோகன்தாஸ் தன்னை முக்கிய அரசியல் கட்சியின் உறுப்பினர் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர் ஆகியோரிடம் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும், தங்களது மகனுக்கு உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணி வாங்கித் தருவதாகவும், இதற்கு அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு பணம் கொடுக்க ரூ. 98 லட்சமும், தனது வியாபாரத்துக்காக ரூ. 65 லட்சமும் கடனாக தருமாறும், வேலை கிடைக்காவிட்டால் பணத்தைத் திருப்பித் தந்துவிடுவதாகவும் கூறினார்.
இதை நம்பிய சிதம்பரம் பல்வேறு தவணைகளில் மோகன்தாஸிடம் ரூ. 1.63 கோடி கொடுத்தார். ஆனால், மோகன்தாஸ் வேலை வாங்கித் தராததால், அவரிடம் பணத்தைத் திரும்பத் தருமாறு சிதம்பரம் 2018 ஆம் ஆண்டு கேட்டார். பணத்தைத் தர முடியாது என மோகன்தாஸ் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தஞ்சாவூர் மாவட்டக் காவல் அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி சிதம்பரம் புகார் செய்தார். இதன் பேரில் மாவட்டக் குற்றப் பிரிவினர் மார்ச் 14 ஆம் தேதி வழக்குப் பதிந்து, மோகன்தாஸை மாவட்டக் குற்றப் பிரிவினர் நேற்று (மார்ச் 25) கைது செய்தனர்.