தஞ்சாவூருக்கு முதல் முறையாக புள்ளி மூக்கு வாத்துகள் வருகை

60பார்த்தது
தஞ்சாவூருக்கு முதல் முறையாக புள்ளி மூக்கு வாத்துகள் வருகை
தமிழ்நாடு வனத் துறை, தஞ்சாவூர் அருங்காட்டுயிர் காப்பகம் மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை (இவெட்) சார்பில் நில வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. 

இதில் தஞ்சாவூர் வனத் துறையின் வனச்சரகர் ரஞ்சித், வனவர்கள் இளையராஜா, ரவி, அறக்கட்டளையின் நிறுவனர் சதீஷ்குமார் ராஜேந்திரன் தலைமையில் 15 தன்னார்வலர்கள் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். இதன் மூலம் வள்ளலார் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வளாகத்தில் 70 வகை பறவை இனங்களைச் சேர்ந்த 1,113 பறவைகள் இருப்பது தெரிய வந்தது. மேலும், வளாகத்தில் உள்ள குளத்தில் வலசைப் பறவையான புள்ளிமூக்கு வாத்துகள் காணப்பட்டன. தஞ்சாவூர் பகுதியில் இந்த வாத்துகள் காணப்படுவது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் செம்மார்பு குக்குருவான் குருவிகளும் அதிக அளவில் காணப்பட்டன. 

மேலும், தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வனப் பகுதியில் 58 பறவை இனங்களும், 667 பறவைகளும் கணக்கெடுக்கப்பட்டன என அக்குழுவினர் தெரிவித்தனர். தஞ்சாவூர் அருகே சென்னம்பட்டி, ஆச்சம்பட்டி காப்புக் காடுகளிலும், கும்பகோணம் வனச்சரகத்தின் சார்பில் மகாராஜபுரம் அணைக்கரை பகுதிகளில் தன்னார்வலர்கள் மருத்துவர் ப்ரீத்தி, பெஞ்சமின் கொண்ட குழுவினரால் பறவை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.