தஞ்சாவூரில் உணவக உரிமையாளர் வீட்டில் வெள்ளிக்கிழமை கதவை உடைத்து 50 பவுன் நகைகள், ரூ. 5 லட்சத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களைக் காவல் துறையினர் தேடுகின்றனர்.
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை நீலகிரி ஊராட்சிக்கு உட்பட்ட ரெஜினா நகரைச் சேர்ந்தவர் டி. ஜெயக்குமார் (49). இவர் மருத்துவக்கல்லூரி மூன்றாவது வாயில் எதிரே உணவகம் நடத்தி வருகிறார். இவரது மனைவி சுகன்யா அரசு பள்ளியில் ஆய்வக உதவியாளர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஜெயக்குமார் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு உணவகத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். இரு மகன்கள் பள்ளிக்குச் சென்ற பிறகு மனைவி சுகன்யாவும் 9 மணிக்கு வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றார்.
பிற்பகல் 3 மணியளவில் ஜெயக்குமார் வீட்டுக்குத் திரும்பியபோது, பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 50 பவுன் நகைகள், ரூ. 5 லட்சம் திருடுபோயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தில் ஜெயக்குமார் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.