ஆர். கே. ஆர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் மறுசந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. திருவிடைமருதூர் அருகே நாச்சியார்கோவில் ஆர். கே. ஆர் அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த 1999ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்களின் மறுசந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து கலந்துகொண்டனர். முன்னாள் ஆசிரியர்களை மாலை அணிவித்து மரியாதை செய்து மேளதாளத்துடன் வரவேற்று, மரக்கன்று நடப்பட்டது.
தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் அனைவரும் பள்ளிக்குச் சென்று தாங்கள் படித்த இடத்தில் அமர்ந்து, ஆசிரியர்கள் வருகைப் பதிவேடு எடுக்க, மாணவர்கள் பிரசென்ட் என்று சொல்ல, ஆசிரியர்கள் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை மகிழ்ச்சியுடன் துவங்கிவைத்தனர். அப்போது அனைவருக்கும் 90களின் மிட்டாய்கள் வழங்கப்பட்டன. பின் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் இறந்துபோன ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்பு பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது. ஒவ்வொரு ஆசிரியரும் தங்களின் 90களில் நடந்த பள்ளி அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டனர். மாணவர்களும் தாங்கள் படித்தபோது நிகழ்ந்த சுவாரசியமான நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டனர்.