பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இருவருக்கும் இடையே சுமூக நிலை ஏற்படவும், தமிழகத்தின் பாட்டாளி மக்கள் கட்சி வலுபெற்று தேர்தலில் வெற்றியடைய வேண்டியும் தஞ்சை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில், தஞ்சை மாவட்ட பாமக செயலாளர் ம. க. ஸ்டாலின் ஏற்பாட்டில், நவகிரக கோவில்களில் பிரதானமாக விளங்கும் சிவ சூரியனார் திருக்கோயிலில் மங்கள ஆதித்ய மகா யாகம் நடந்தது.
கோயிலில் உள்ள மகா மண்டபத்தில் புனித நீர் கொண்ட கலசங்கள் வைக்கப்பட்டு தொடர்ந்து பல்வேறு விதமான சிறப்பு பூஜைகள் மற்றும் யாக பூஜைகள் நடந்தன. தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்ட கலசங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோயிலில் உள்ள மூலவர் உள்ளிட்ட நவகிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இந்த யாக நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம், உழவர் பேரியக்கம் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.