கும்பகோணம் வட்டம், தாராசுரம், மேலசத்திரம் பகுதியைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் கண்ணன் (55). இவர், அதே பகுதியைச் சேர்ந்த குமரேசன் மகன் ஜெயபிரகாஷ் (23), ஜெயராமன் மகன் சிவக்குமார் (38), ஜெயராமன் மகன் ராமன் (35) ஆகியோருடன் ஒரு காரில் தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்க்க திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தார்.
காரை ஜெயபிரகாஷ் ஓட்டினார். தஞ்சாவூர் - விக்கிரவாண்டி புறவழிச் சாலையில் தேவராயன் பேட்டை பிரிவு சாலை அருகே சென்றபோது, எதிரே தஞ்சாவூரிலிருந்து திருக்கடையூர் நோக்கி கம்பிகள் ஏற்றிச் சென்ற லாரி, காரின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கண்ணன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜெயப்பிரகாஷ், சிவகுமார், ராமன் ஆகியோர் லேசான காயமடைந்து பாபநாசம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பாபநாசம் காவல் ஆய்வாளர் சகாய அன்பரசு மற்றும் போலீசார், கண்ணன் உடலை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புகாரின்பேரில், வழக்குப் பதிந்து, விபத்துக்கு காரணமான லாரியை ஓட்டி வந்த திருச்சி, பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த முகமது ஹனீபா மகன் சபி (32) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.