ஆண்டிபட்டி அருகே உள்ள கோத்தலூத்துவில் நடைபெற்ற மக்கள் தொடர்பு குறைதீர்க்கும் முகாமில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங். உடன் ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினர் மகாராஜன். ஆண்டிபட்டி அருகேயுள்ள கோத்தலூத்துவில் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 178 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினர் ஆ. மகாராஜன், பெரியகுளம் சார்ஆட்சியர் ரஜத்பீடன், மாவட்ட சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சாந்தி, ஆண்டிபட்டி வட்டாட்சியர் ஜாஹீர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீஸ்சந்திரபோஸ், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வருவாய்த்துறை, உழவர் பாதுகாப்புத்திட்டம், பிற்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் சார்பில், 178 பேருக்கு மொத்தம் ரூ.1.60 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். பின்னர், கதிர்நரசிங்காபுரம் அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளியில் சத்துணவுத்திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்படுவதை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.