தேனி மாவட்டம் கூடலூர் அருகே மேகமலை வன உயிரின சரணாலய பகுதியில் சுருளியாறு மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கம்பம், கூடலூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று வாங்கி வருகின்றனர்.
இந்தநிலையில் மான், யானை, காட்டெருமை, குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி உணவு தேடி மின்வாரிய ஊழியர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் அவர்கள் பெரிதும் அவதியடைந்து வந்தனர். இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக குடியிருப்பு பகுதியில் ஒற்றை காட்டு யானை உலா வருகிறது. இதனால் மின்வாரிய ஊழியர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து வீட்டைவிட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே காட்டுயானைகளை விரட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.