தேனி மாவட்டம், கம்பம், மெட்டு செல்லும் சாலை கிளப் அருகில் குடியிருந்து வருபவர் முபாரக் அலி (68). இவரது மகன் முகமது இர்பான் (24) எம்.ஏ. முடித்து விட்டு தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்விற்கு தயாராகிக் கொண்டிருந்தார்.
கடந்த 6ம் தேதி, இர்பான் தனது நண்பர்களுடன் சுப்பிரமணி கோயில் தெருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் முஹம்மது தாஹா என்பவரது வீட்டின் மாடியில் கட்டிடப் பணிக்காக வைக்கப்பட்டிருந்த கம்புகளை எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டின் மொட்டை மாடியில் ஒட்டியபடி சென்ற உயரழுத்த மின்சார கம்பி எதிர்பாராதவிதமாக இர்பானின் தலையில் உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தனது ஒரே மகனும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதைப் பார்த்து மனக்குழப்பத்தில் முபாரக் அலி நேற்று காலை திடீரென உயிரிழந்தார். இந்நிலையில் நேற்றிரவு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவரை மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மகனும் உயிரிழந்தார். இச்சம்பவம் கம்பம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.