சென்னை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கும்மிடிப்பூண்டி மற்றும் அரக்கோணம் மார்க்கங்களில் உரிய அறிவிப்பு இன்றி தொழில்நுட்ப பராமரிப்பு பணி நடைபெறுவதால், சென்னை புறநகரில் இருந்து 49 ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். பாடலிபுத்திரத்திலிருந்து சென்ட்ரல் மார்க்கம் வழியாக பெங்களூர் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரம் நிறுத்தப்பட்டதால், முதியவர்கள், குழந்தைகளுடன் உள்ள தாய்மார்கள், வயதான பெண்கள் என ரயில் பயணிகள் கடும் அவதிக்காளாயினர். கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய பிளாட்பார்மை தாண்டி ரயில் நிற்பதால், தண்டவாளத்தை கடந்து செல்ல முடியாமல் சுரங்கப்பாதை தண்ணீரில் மூழ்கி மூடப்பட்ட நிலையில், ஆபத்தான நிலையில் ரயிலுக்கு அடியில் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர். மேலும், 2 மணி நேரமாக எக்ஸ்பிரஸ் ரயில் நிற்பதால் இயற்கை உபாதைகள் மற்றும் மதிய உணவு சாப்பிட முடியாமல் தவித்து வருகின்றனர். ரயில் பயணிகளுக்கு உரிய முன்னறிவிப்பு செய்யாமல் அலைக்கழிப்பதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.