திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் ஆரணி ஆற்றங்கரையில் உள்ள அருள்மிகு அன்னபூரணி அம்மாள் உடனுறை ஐமுகத்தீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிவபெருமானுக்கு சிறப்பு அன்ன அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஊத்துக்கோட்டை, பாலவாக்கம், ஆரணி, கன்னிகைப்பேர், வடமதுரை, தாமரைப்பாக்கம், சென்னாங்கரணி, எருக்குவாய், ஆத்துப்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்ன அபிஷேகத்திற்குப் பிறகு, அன்னபூரணி தாயார் ஐமுகத்தீஸ்வரர் பெருமானுடன் அலங்கரிக்கப்பட்டு கோவில் பிரகாரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஐப்பசி பௌர்ணமி அன்று சிவபெருமானை தாயாருடன் வழிபட்டால் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.