திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த செய்யூரைச் சேர்ந்த தனசேகர் (34) என்பவர், பெட்ரோல், டீசல் குழியில் இறங்கி வேலை பார்த்தபோது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். உரிமையாளர்கள் தரப்பில் மின்சார வயர்களை எடுக்க எலக்ட்ரீசியனுக்குப் பதிலாக கொத்தனாரைப் பயன்படுத்தியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளைக் கொண்ட தனசேகரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆரம்பாக்கம் காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.