திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகப் பகுதிகளில் இரவு நேரத்தில் மின் விளக்கு வசதி இல்லாததால், பாம்பு மற்றும் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மேலும், இப்பகுதி மதுபிரியர்களால் மது அருந்தும் இடமாக மாறியுள்ளது. இதனால், வருவாய்த்துறை மற்றும் அரசு ஊழியர்கள் இரவு நேரத்தில் அலுவலகத்திலிருந்து செல்லவும், பொதுமக்களும் இப்பகுதியைக் கடந்து செல்லவும் அச்சமடைந்துள்ளனர். வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மின்விசிறி 24 மணி நேரமும் இயங்குவது மதுபானம் அருந்துபவர்களுக்கு வசதியாக உள்ளதாகவும், பாதுகாப்பு குறைபாடு மற்றும் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் சமூக விரோதிகள் இப்பகுதியை பயன்படுத்துவதாகவும் அரசு ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.