பெரிய புராணத்தை இயற்றிய தெய்வப் புலவர் சேக்கிழார் பிறந்த ஊரான குன்றத்தூரில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சீரமைக்கப்பட்ட சேக்கிழார் கோவிலில் இன்று காலை கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கோவில் வளாகத்தில் சொற்பொழிவு மண்டபம், பசுக்கள் காப்பகம் ஆகியவையும் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா கண்டன. யாகசாலைகளில் புனித நீர் கலசங்களில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு, கருவறை விமானத்தின் மீது கைலாய வாத்தியங்கள் முழங்க ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை மற்றும் புனித நீர் தெளிப்பு நடைபெற்றது. அசம்பாவிதம் இன்றி பாதுகாப்புப் பணிகளை குன்றத்தூர் போலீசார் மேற்கொண்டனர். பக்தர்களுக்கு குடிநீர், அன்னதானம் வழங்கப்பட்டது. குன்றத்தூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.