சர்வதேச அளவில் நடந்த சிலம்பம் போட்டியில் திருவொற்றியூர் வீரர், வீராங்கனையர், 18 தங்கம் உட்பட 38 பதக்கங்களை வென்று அசத்தினர். மலேஷியா போர்க்கலை சிலம்பம் அமைப்பு சார்பில், சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி, மலேஷியாவின் கோலாலம்பூரில் நடந்தது. போட்டியில், பல்வேறு வயதினருக்கு, தனித்திறமை மற்றும் தொடு முறை என, இரு பிரிவுகளில் போட்டி நடந்தது. இதில் மலேஷியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, சிங்கப்பூர், வியட்னாம்,
இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். போட்டியில்,
இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து, திருவொற்றியூரில் உள்ள யுத்த வர்ம சிலம்ப போர்க்கலை அகாடமி சார்பில், மூன்று வீராங்கனையர் உட்பட, 22 வீரர்கள் பங்கேற்றனர். இவர்கள் பல்வேறு விதமான பிரிவுகளில் பங்கேற்று, 18 தங்கம், 17 வெள்ளி, மூன்று வெண்கலம் என, 38 பதக்கங்களை வென்று அசத்தினர். மேலும், ஒட்டுமொத்தமாக முதலிடத்தை மலேஷியாவும், இரண்டாவது இடத்தை இந்தியாவும் கைப்பற்றின.
இந்தியா சார்பில் பங்கேற்று, தமிழகத்திற்குபெருமை சேர்த்து சென்னை திரும்பிய வீரர், வீராங்கனையருக்கு நேற்று, சென்னை விமான நிலையம் மற்றும் திருவொற்றியூர் பகுதியில், உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.