திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் மீண்டும் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இரவு 9 மணி வரை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மழையால் சாலைகளில் மழைநீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இடி மின்னலுடன் பெய்த கனமழையால் வயல்கள், ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பும் அளவிற்கு மழை பெய்தது. இதன் காரணமாக சம்பா மற்றும் தாளடி பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.