திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே, வயலில் நடவு வேலைக்குச் சென்ற லலிதா என்ற பெண்ணுக்கு பாம்பு கடித்தது. காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த அவர் வீடு திரும்பினார். இதற்கிடையில், மனைவிக்கு பாம்பு கடித்ததால் மனமுடைந்த கணவர் நாகராஜன், வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அவர், பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜன் பரிதாபமாக உயிரிழந்தார்.