திருவாரூா் நகரில் பகல், இரவு நேரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் சுற்றித்திரிவதால் விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் புகாா் தெரிவித்து, சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்தனா்.
அந்தவகையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டன. மாடுகளை திரும்பப் பெற வந்த உரிமையாளா்களிடம், சாலைகளில் கால்நடைகளை மேய விடமாட்டேன் என்று உத்தரவாதம் பெற்று ஒப்படைக்கப்பட்டன. இதற்கிடையே, அண்மைக் காலமாக மீண்டும் கால்நடைகள் சாலைகளில் சுற்றித் திரியத் தொடங்கியதையடுத்து, பொது மக்களிடமிருந்து நகராட்சி நிா்வாகத்துக்கு கோரிக்கைகள் வரத் தொடங்கின. இதையடுத்து, திருவாரூா் நகரப் பகுதிகளில் நேற்று சோதனை மேற்கொண்ட நகராட்சி பணியாளா்கள், சாலைகளில் படுத்துக்கிடந்த 30-க்கும் மேற்பட்ட மாடுகளை பிடித்து நகராட்சி அலுவலக வளாகத்தின் பின்புறத்தில் அடைத்தனா்.
பிடிபட்ட மாடுகளுக்கு அடையாளக் குறியிடப்பட்டு மாட்டின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்து திரும்ப வழங்கப்படும். மூன்றாவது முறையாக மாடுகள் பிடிபட்டால், மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு மாட்டின் உரிமையாளா்களிடம் வழங்கப்படாமல் கோ சாலைக்கு வழங்கப்படும் என நகராட்சி நிறுவாகம் தெரிவித்துள்ளது.