திருவாரூரில் உலகப்புகழ்பெற்ற தியாகராஜசுவாமி திருக்கோவிலின் ஆழித்தேரோட்டம் அடுத்த மாதம் ஏழாம் தேதி ஆயில்ய நட்சத்திரத்தில் நடைபெறுகிறது. திருவாரூரில் பிறந்தாலும், தியாகராஜ சுவாமியின் பெயர் சொன்னாலும் முக்திதரும் திருத்தலமாகவும், சைவத் திருத்தலங்களில் முதன்மையானதுமாகும். தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய இந்த ஆழித்தேரோட்டத்தினை காண்பதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி இதர மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். தியாகேசா என தேரை வடம்பிடித்து இழுக்கும் காட்சி கண்கொள்ளா காட்சியாகும். இந்தத் திருக்கோவிலில் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கியமான நிகழ்ச்சி இந்த ஆழித்தேரோட்டம்.
தியாகராஜருக்கு உகந்த நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்காக கடந்த மாதம் பந்தக்கால் முகூர்த்த நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் இன்று தியாகராஜ சுவாமி திருக்கோவிலில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேக ஆராதனைகள் கொடிமரத்திற்கு செய்யப்பட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. நிகழ்வில் நாகை இந்துசமய அறநிலையத்துறை துணை ஆணையர் இராணி, பரம்பரை அறங்காவலர் ராம் தியாகராஜன், செயல் அலுவலர் கவியரசு உள்ளிட்ட ஊர்முக்கியஸ்தர்கள், சிவனடியார்கள், ஆன்மீக பக்தர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.