ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் நம்ம திருவாரூர் தேர்-தாங்க. 96 அடி உயரமும், 400 டன் எடையும் கொண்ட இந்த ஆழித்தேரின் கலசத்தில் 2 வெள்ளிக் குடைகள் உள்ளன. தேர் கலசத்தில் வெள்ளிக் குடை இருப்பதை வேறு எங்கும் காண முடியாது. 7 அடுக்குகளைக் கொண்ட இத்தேரில் அமைந்திருக்கும் 64 தூண்களும், 4 குதிரைகளும் - 64 கலைகளையும், 4 குதிரைகளையும் நான்கு வேதங்களையும் குறிக்கின்றன.
பாற்கடலில் உருவான தேவதாருக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கடல் போன்ற தேர் என்பதால் இதற்கு ஆழித்தேர் என்ற பெயர் வந்தது. பல டன் மூங்கில்கள், 500 கிலோ வண்ணத்துணிகள், 50 கழிறுகள், 5 டன் பனைமரக் கட்டைகள், இழுப்பதற்கு 4 பெரிய வடங்கள் ஆகியவை இந்த தேரை அலங்கரிக்க பயன்படுத்தப்படுகின்றன. தேரை இழுக்க பயன்படுத்தப்படும் ஒரு வடம் 425 அடி நீளம் கொண்டது. ஆழித்தேரை வடம் பிடித்து இழுப்பதால் கயிலையில் இடம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.