கோவில்பட்டி அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியையடுத்த எட்டு நாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் சூசை மனுவேல் மகன் மைக்கேல் ராஜ் (26). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை செய்துவந்தார்.
இவர், எட்டுநாயக்கன்பட்டியில் உள்ள மிக்கேல் ஆண்டவர் ஆலயத் திருவிழாவுக்காக 2 நாள்களுக்கு முன்பு வந்திருந்தார். இந்நிலையில், அவர் நேற்று(செப்.28) தனது நண்பர்கள் இருவருடன் அப்பகுதியில் உள்ள தனியார் கிணற்றில் குளிக்கச் சென்றனராம். இருவரும் குளித்துவிட்டு வெளியே வந்த நிலையில், மைக்கேல்ராஜ் நீரில் மூழ்கியது தெரிய வந்ததாம்.
தகவலின்பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரராஜ் தலைமையிலான தீயணைப்புப் படையினர் சென்று, மைக்கேல்ராஜை மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து, கொப்பம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.