தூத்துக்குடி மாவட்டம், கடலையூர் தெற்குப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துசாமி மகள் கார்த்திகாப்பிரியா (19). கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் பிகாம் 2ஆம் ஆண்டு படித்து வந்த இவர், வீட்டில் வேலை செய்யாமல் இருந்து வந்தாராம். அதை அவரது தாய் கண்டித்தாராம்.
இந்நிலையில் அவர் நேற்று விஷத்தை குடித்துவிட்டு மயங்கி விழுந்தாராம். இதைக் கண்ட பெற்றோர், அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மற்றொரு சம்பவம்: குமாரபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பொய்யாழி மகன் கண்ணன் (48). தொழிலாளியான இவர், கடந்த சில வருடங்களாக எய்ட்ஸ் நோய் மற்றும் உயிர் தளத்தில் அடைப்பு ஏற்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாராம்.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர், இம்மாதம் 1ஆம் தேதி விஷம் அருந்தினாராம். கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கண்ணன், வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கொப்பம்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.