தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (S. I. R.) பணிகளை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி, தூத்துக்குடியில் திமுக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. நவம்பர் 11-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம், V. V. D சிக்னல் அருகே மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்ஐஆர் மூலம் உண்மையான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுவதாகவும், மழைக்காலத்தில் படிவம் நிரப்புவது கிராமப்புற மக்களுக்கு சிரமம் என்றும், இது ஏராளமான வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் நிலைக்கு வழிவகுக்கும் என்றும் திமுக தெரிவித்துள்ளது. மேலும், மத்திய அரசு மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் எதேச்சாதிகார நடைமுறையில் செயல்படுவதாகவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.