தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் - பசுவந்தனை சாலையில் உள்ள ஒரு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட தோட்டத்தில் உள்ள மரத்தில் இளைஞர் சடலம் ஒன்று தொங்குவதாக கடம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததாம்.
சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சடலத்தைக் கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அவர் ராஜபாளையம் சேத்தூர் மேட்டுப்பட்டி தேவேந்திரகுல பெரிய தெருவைச் சேர்ந்த (17) என்பதும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடம்பூருக்கு வந்த இவர் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார் என்றும் தெரியவந்தது. சிறுவன் கடம்பூர் ஹார்வி ரோட்டைச் சேர்ந்த சண்முகையா மகன் மாரிச்செல்வத்தின் (38) வெள்ளாடுகளை மேய்த்து வந்ததாராம். அப்போது மாரிச்செல்வத்தின் தம்பி மனைவிக்கும், சிறுவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதையடுத்து இருவரையும் கண்டித்த மாரிச்செல்வம் தனது ஆடுகளை விற்றுவிட்டாராம்.
ஆனால் பழக்கம் இருந்து வந்ததையடுத்து மாரிச்செல்வம் சிறுவனை பார்த்து சாதி பெயரைக் கூறி அவதூறாகப் பேசி தற்கொலைக்கு தூண்டி கொலை மிரட்டல் விடுத்ததால் சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாய் அளித்த புகாரின் பேரில், கடம்பூர் போலீசார் வழக்குப் பதிந்து மாரிச்செல்வத்தை நேற்று கைது செய்தனர்.