தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் ஓடும் மினி பஸ்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கிரிஜா உத்தரவின் பேரில், கோவில்பட்டி மோட்டார் வாகன ஆய்வாளர் பெலிக்ஸன் மாசிலாமணி தலைமையில் அதிகாரிகள் அண்ணா பஸ் நிலையம், தீயணைப்பு நிலையம் சந்திப்பு மற்றும் ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். சோதனையின் போது, அரசு நிர்ணயித்த அதிகபட்ச கட்டணமான ரூ. 11-க்கு பதிலாக, 4 மினி பஸ்களில் பயணிகளிடம் ரூ. 13, ரூ. 14 என கூடுதலாக கட்டணம் வசூலித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த 4 மினி பஸ்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மேலும், 4 பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பொருத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.