தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே பசுவந்தனையை அடுத்த கோவிந்தம்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த எட்டுராஜ் மகன் அருண் சந்தோஷ் (17). பிளஸ் 1 வகுப்பில் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாததால், கோவில்பட்டி முத்து நகரிலுள்ள அருண்பிரகாஷ் என்பவரிடம் டியூஷன் படித்து வந்தாராம். இந்நிலையில், நேற்று முன்தினம் அருண்பிரகாஷ் கருங்காலிப்பட்டியில் உள்ள தனது தோட்டத்துக்கு அருண்சந்தோஷ், அவரது நண்பர் க. ஆகாஷ் ஆகியோருடன் சென்றாராம்.
அங்கு, அருண்சந்தோஷ் பனைமரத்தில் ஏறி நுங்கு வெட்டியபோது தவறி கீழே விழுந்தாராம். இதில் காயமடைந்த அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னர் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் திங்கள்கிழமை உயிரிழந்தார். நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.