தூத்துக்குடியில் லாரி டிரைவரை மிரட்டி செல்போன் பறித்துச் சென்றதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருநெல்வேலியைச் சேர்ந்த லாரி டிரைவர் ராஜேஷ் செல்வக்குமார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தூத்துக்குடி 3ஆவது மைல் அருகே உள்ள இந்திய உணவுக்கழக கிடங்கு பகுதியில் உள்ள இணைப்புச் சாலையோரத்தில் லாரியை நிறுத்தி வைத்திருந்தாராம். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர் திடீரென ராஜேஷ் செல்வக்குமாரை மிரட்டி, அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றுவிட்டனர்.
இதுகுறித்த புகாரின்பேரில், சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மடத்தூர் முருகேசன் நகரைச் சேர்ந்த பாலமுருகன் மகன் மலையரசன்(21), பிராங்க்ளின்(20), திருவிக நகரைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஆகிய 3 பேர் இந்த வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து செல்போனையும் பறிமுதல் செய்தனர்.