தூத்துக்குடி: பனைமரம் முறிந்து விழுந்து மின்கம்பங்கள் சேதம்

77பார்த்தது
தூத்துக்குடி: பனைமரம் முறிந்து விழுந்து மின்கம்பங்கள் சேதம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அதன்படி நேற்று காலை முதல் அவ்வப்போது லேசான மேகமூட்டம் வந்து சென்றது. மதியத்துக்கு பிறகு மேகமூட்டமாக காணப்பட்டது. சிறிது சாரல் மழை பெய்தது. மாலையில் திடீரென பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் மரங்கள் காற்றில் ஆடிக்கொண்டு இருந்தன. அந்த நேரத்தில் தூத்துக்குடி அருகே உள்ள அந்தோணியார்புரம் கெபி அருகே உள்ள ஒரு பனைமரம் பாதியில் இருந்து முறிந்து அருகில் இருந்த மின்சார ஒயரில் விழுந்து, கெபியின் சுற்றுச்சுவரில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த பகுதியில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதில் மின்கம்பங்கள் சேதமடைந்து வயர்கள் துண்டிக்கப்பட்டதால், அந்தோணியார்புரத்தில் மின்சாரம் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி