மெஞ்ஞானபுரம் அருகே மதுபோதையில் உறவினரை தாக்கிய கறிக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகே உள்ள கல்விளையை சேர்ந்தவர் சேவியர் (55). எலக்ட்ரிக்கல் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவரது உறவினர் தசிகரன் (61). அந்த பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார்.
இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு இருவரும் சடையனேரி குளம் அருகே காட்டுப்பகுதியில் மது அருந்தியுள்ளனர். சிறிது நேரத்தில் போதை தலைக்கு ஏறிய நிலையில், தங்களது குடும்ப பிரச்சினை குறித்து பேசியுள்ளனர். இதில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இதில் சேவியர் படுகாயமடைந்தார். அவர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தசிகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.