பள்ளி, கல்லூரிகளில் சாதி மோதலை தடுக்க நீதிபதி சந்துரு அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த தங்க கணேஷ் மகன் தேவேந்திர ராஜ். இவர் பாளையங்கோட்டையில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளிக்கு தேர்வு எழுத பஸ்சில் வந்தபோது மர்ம நபர்கள் சிலர் பஸ்சை வழிமறித்து அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
இதில் படுகாயம் அடைந்த தேவேந்திர ராஜ் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. நேற்று மாலை நேரில் சந்தித்தார். பின்னர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூ. 2 லட்சம் நிதி உதவி வழங்கினார். மருத்துவர் ரேவதி மற்றும் டாக்டர்கள் குழுவினரை சந்தித்து சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது: ஸ்ரீவைகுண்டம் அருகே சாதி வெறியர்களால் பிளஸ்-1 மாணவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். அவரை காப்பாற்றும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். மாணவர் கபடியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று கொண்டாடியதை பொறுத்துக்கொள்ள முடியாத கும்பல் கொலை வெறி செயலில் ஈடுபட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறினார்.