பழச்சாறில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மூதாட்டியிடம் நகை பறித்த தம்பதிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. சிவத்தையாபுரத்தைச் சேர்ந்த ஜெயபாண்டியன் மனைவி ஜெயலிங்கேணி (80) என்பவர், 2015ஆம் ஆண்டு ஏரல் சோமன் கோயிலுக்குச் சென்றார். அங்கு வந்திருந்த, விழுப்புரம் பாண்டியன் நகரைச் சேர்ந்த வாசுதேவன் (70), அவரது மனைவி சங்கரி (58) ஆகியோர் ஜெயலிங்கேணியிடம் நெருங்கிப் பழகினர்.
பின்னர், திருச்செந்தூர் செல்லும் தங்களுடன் வருமாறு கூறி, அவரை காரில் அழைத்துச் சென்றனர். அப்போது, அவர்கள் கொடுத்த மயக்கம் மருந்து கலந்த பழச்சாறைக் குடித்ததும் ஜெயலிங்கேணி மயக்கமடைந்தார். அவர் அணிந்திருந்த 6.5 பவுன் நகைகள், கைப்பேசி, ரூ.200 ஆகியவற்றை அத்தம்பதி பறித்துக்கொண்டு, அவரை ஏரல் கோயில் அருகிலேயே விட்டுவிட்டு தப்பியோடினர். மயக்கம் தெளிந்த ஜெயலிங்கேணிக்கு தனது நகைகள் உள்ளிட்டவை பறிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், ஏரல் போலீசார் வழக்குப் பதிந்து, வாசுதேவன், சங்கரி ஆகியோரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி 2ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி பிரீத்தா விசாரித்து, வாசுதேவன், சங்கரி ஆகியோருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.