திருநெல்வேலி, பழைய பேட்டையைச் சேர்ந்த சங்கர் மகன் முத்துராஜ் (50). இவர் தனது மனைவி கருத்தம்மாளுடன் தூத்துக்குடி எம். ஜி. ஆர். பூங்கா அருகே தங்கியிருந்து மையவாடி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் பழைய பாட்டில்கள், காகிதங்களை சேகரித்து விற்பனை செய்து வந்தார்.
அப்பகுதியில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கமாரியப்பன் (43) என்பவரும் பழைய பாட்டில்களை சேகரித்து விற்பனை செய்து வருகிறார். முத்துராஜ், தங்கமாரியப்பன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். இந்நிலையில் இன்று மாலை, எம்ஜிஆர் பூங்கா அருகே இருவரும் மதுபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனராம். அப்போது, முத்துராஜை தங்கமாரியப்பன் இரும்புக் கம்பியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில், காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகிறார். தலைமறைவான தங்கமாரியப்பனை போலீசார் தேடி வருகின்றனர்.