மழைவெள்ளத்தில் சேதமடைந்த ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பெய்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில், ஏரல் தாமிரபரணி ஆற்றின் உயர்மட்ட பாலத்தின் வட பகுதியில் இணைப்பு சாலை அரிப்பு ஏற்பட்டு பலத்த சேதம் அடைந்தது. இதனால் புதிய உயர்மட்ட பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, தற்காலிகமாக அருகில் பழுதாகி கிடந்த தரைமட்ட பாலத்தை சீரமைத்து போக்குவரத்து நடந்து வருகிறது. சேதமடைந்த புதிய உயர்மட்ட பாலத்தை சீரமைக்க அரசு ரூ. 6.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த நிதியில் நெடுஞ்சாலைத் துறை மூலம் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. இதில் பாலத்தில் கூடுதலாக 2 தூண்கள் அமைத்து, பாலத்தை நீட்டித்து இணைப்பு சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் காலையில் ஏரல் ஆற்றுப்பாலத்திற்கு சென்று சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் ஆய்வு செய்தார்.