திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாகம் விழாவை முன்னிட்டு திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா வருகிற 9ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை முன்னிட்டு திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே வருகிற 9ம் தேதி 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி, காலை 9: 15 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06101) காலை 10: 50 மணிக்கு திருச்செந்தூர் சென்றடைகிறது. மறு மார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து காலை 11: 20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06102) மதியம் 12: 55 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
மேலும் திருச்செந்தூரிலிருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06103) இரவு 10: 30 மணிக்கு நெல்லை வந்தடையும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06104) நள்ளிரவு 12: 30 மணிக்கு திருச்செந்தூர் வந்தடையும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.