ஆறுமுகனேரியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி மடத்துவிளை ஆசாரிமார் தெருவைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் சுடலையாண்டி (63). இவரது மனைவி சாந்தி (57). சுடலையாண்டி நேற்று முன்தினம் இரவு அவரது மகனுடன் பஜாருக்குச் சென்றுவிட்டாராம்.
அப்போது தனியாக வீட்டில் இருந்த சாந்தி கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த மர்ம நபர் வீட்டுக்குள் புகுந்து சாந்தியின் கழுத்தை நெரித்து சங்கிலியை பறித்துக் கொண்டு பின்புறம் வழியாக தப்பியோடிவிட்டாராம். மர்மநபர் பறித்ததில் பாதி சங்கிலி கட்டிலில் கிடந்ததாம். இதுகுறித்து ஆறுமுகனேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.