தூத்துக்குடி பனிமயமாதா பேராலயம் அருகே உள்ள சிலுவையார் கெபி தெரு பகுதியைச் சேர்ந்த முன்னாள் கப்பல் மாலுமி கில்பர்ட் தனது மனைவியுடன் வெளியூர் சென்று இருந்ததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் சிலர் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 32 1/2 பவுன் நகைகள் மற்றும் 24 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக தென்பாகம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர்.
இதில் இந்த கொள்ளையில் ஈடுபட்டது மினி சகாயபுரத்தைச் சேர்ந்த அந்தோணி, ஆக்னல் ராஜீவ் நகரைச் சேர்ந்த கண்ணன், பீச் ரோடு பகுதியைச் சேர்ந்த அரவிந்த், கோவில்பட்டி குருவிகுளம் பகுதியைச் சேர்ந்த மோகன் ஆகியோர் என்பது தெரிய வந்தது. மேலும் இவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த ஏப்ரல் மாதம் கான்வென்ட் ரோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பூட்டை உடைத்து 14 1/2 பவுன் தங்க நகைகள் மற்றும் 40,000 ரூபாய் ரொக்க பணத்தை திருடியதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 35 பவுன் தங்க நகை, 20,000 ரூபாய் பணம் மற்றும் கார் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.