உலக குருதிக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ள இரத்த சேமிப்பு வங்கி சார்பில் இரத்ததானம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது. தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த பேரணியில் செவிலியர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் இளம் பகவத் தலைமையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக இந்த பேரணி சென்றது. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டில் அதிக முறை இரத்த தானம் செய்த 26 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியிலும் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு அதிக முறை இரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்களையும் கேடயத்தையும் வழங்கினார். இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன், "இரத்ததானம் என்பது மிகவும் அவசியமானது. இரத்ததானம் செய்வதன் மூலம் பல உயிர்களை நாம் காக்க முடியும். அது மட்டுமின்றி, நமது ஆரோக்கியத்திற்கும் இந்த இரத்த தானம் முன்மாதிரியாக விளங்குகிறது. இதுபோன்ற இரத்த தானம் செய்யும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. மேலும் பல இளைஞர்கள் இரத்ததானம் செய்வதற்கு முன்வர வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.