தூத்துக்குடி கோட்ட அஞ்சலகங்களில் 'அஞ்சலக அடையாள அட்டை' எனும் சேவை மூலம் பொதுமக்கள் அடையாள அட்டை பெறும் வசதி அஞ்சல் துறையால் வழங்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் மத்திய மாநில அரசின் பல்வேறு துறைகளின் நலத்திட்டங்களைப் பெற சான்றை நிரூபிக்க வேண்டியது அவசியமாகிறது. இந்திய அஞ்சல் துறையானது பொதுமக்களுக்கு அவர்களின் முகவரியை அங்கீகரிக்கும் வண்ணம் 'அஞ்சலக அடையாள அட்டை' எனும் சேவையை வழங்கி வருகிறது. இந்த சேவையைப் பொதுமக்கள் அருகிலுள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். இந்த அடையாள அட்டையானது தேர்தல் கமிஷன், அகப்பெயருள் விநியோகம், நுகர்வோர் பாதுகாப்புத் துறை மற்றும் தமிழக போலீசாரால் முகவரி சான்றாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
ஆவணங்களில் மாற்றம் மேற்கொள்ளும் சிரமத்தைத் தவிர்க்கும் வகையில் இந்த அடையாள அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான விண்ணப்பப் படிவத்தை அருகிலுள்ள அஞ்சலகத்தில் ரூ 20/- செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். அடையாள அட்டைப் பெறுவதற்கான கட்டணம் ரூ. 250/- ஆகும். இந்த அட்டை மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் ரூ. 100/- செலுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும் ஆதாரில் முகவரி மாற்றத்திற்கு இந்த அஞ்சலக அடையாள அட்டையை பயன்படுத்திக் கொள்ளலாம். அஞ்சல் துறையின் இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.