தமிழக கடலோரப் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக 61 நாட்கள் ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகள் மீன்பிடிப்பிற்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. இந்த தடைக்காலம் நேற்று முன்தினம் ஜூன் 14ஆம் தேதி இரவு நள்ளிரவு முதல் நீங்கியதை தொடர்ந்து ஜூன் 16 இன்று அதிகாலை முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில், தருவைகுளம், வேம்பார் பகுதியைச் சேர்ந்த விசைப்படகுகள் நேற்று கடலுக்குச் சென்றன. இன்று தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 260க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் உற்சாகத்துடன் அதிகாலை முதல் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 60 நாட்களுக்கு பின்பு கடலுக்கு செல்வதால் விசைப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதியபடி கடலுக்கு ஆர்வமாகச் சென்றன.
மேலும் படகில் இருந்து வண்ண வண்ண நிறங்களில் ஜொலிக்கும் வாணவேடிக்கை நிகழ்த்தியபடி உற்சாகமாக சென்றன. விசைப்படகுகள் ஒன்று போல கடலுக்குச் செல்வதை மீனவர்கள் ஆர்வமுடன் பார்த்தனர். இந்நிலையில் 61 நாட்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்த தாங்கள் இன்று நம்பிக்கையுடன் கடலுக்குச் செல்கிறோம். அதிக அளவு மீன்கள் கிடைக்கும் என நம்பிக்கை இருப்பதாக விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.