தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் வருகிற 26ஆம் தேதி மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தூத்துக்குடி மாநகர பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து முடிக்கும் வகையில் ஒவ்வொரு வாரமும் மண்டலம் வாரியாக கோரிக்கைகளை கேட்டு அறிந்து உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில் மேயர் தலைமையில் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக அடுத்த மண்டல முகாமானது வருகின்ற 26ஆம் தேதி வியாழக்கிழமை தெற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேற்படி முகாமில் சொத்து வரி நிர்ணயம், பெயர் மாற்றம், திருத்தங்கள், தண்ணீர் கட்டண பெயர் மாற்றம், தண்ணீர் உபயோக கட்டண விகிதங்கள் மாற்றம், பிறப்பு மற்றும் இறப்பு சான்று திருத்தங்கள், புதிய குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். எனவே பொதுமக்கள் தங்கள் தேவைகளை கோரிக்கை மனுக்களாக வழங்கி பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன் தெரிவித்துள்ளார்.