தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "எங்களது குழந்தைகள் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, சிவந்தாகுளம், தூத்துக்குடியில் படித்து வருகின்றனர். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டாலும், எங்களது குழந்தைகள் அரசு பள்ளிகளில் ஒரு சில காரணங்களால் தொடர முடியாதது மனவருத்தத்தை அளிக்கிறது. சிவந்தாகுளம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் LKG முதல் 8-ம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் ஏறக்குறைய 1000 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கின்ற மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் 8-ம் வகுப்பு முடித்தவுடன் மேற்படிப்பு தொடர சி.வ. மேல்நிலைப் பள்ளி, V.E. ரோடு பள்ளிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த பள்ளியானது எங்களது பகுதியில் இருந்து வெகுதொலைவில் அமைந்துள்ளது. போக்குவரத்து நெரிசல் அதிகமான Main Road ஆக இருப்பதால் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போது சாலை விபத்து ஏற்படுகிறது.