தூத்துக்குடி நகரின் முக்கிய பகுதியில் சி.வ., அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி வளாகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.
கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் பள்ளி வளாகத்தில் தண்ணீர் அதிகளவு தேங்கியது. ஓராண்டுக்கும் மேலாக தண்ணீர் தேங்கி இருந்ததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அப்பகுதியில் ஹாலோ பிளாக் கற்கள் பதிக்கும் பணி சில நாட்களுக்கு முன் துவங்கியது. இந்நிலையில், பள்ளி வளாகத்தில் நடந்து வரும் கட்டுமானப் பணியில் ஹாலோ பிளாக் கற்களை கொண்டுச் செல்லும் பணியில் மாணவர்கள் சிலரை ஆசிரியர்கள் ஈடுபடுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பல்வேறு தரப்பினர் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வீடியோவில் மாணவர்கள் கையிலும், தோளிலும் வைத்துச் சுமந்துபடியும் ஹாலோ பிளாக் கற்களை கொண்டுச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், பள்ளி நிர்வாகம் சார்பில் இதுதொடர்பாக எந்தவித தகவலையும் தெரிவிக்க மறுத்து வருகின்றனர். மாணவர்களை கட்டுமானப் பணிக்கு ஈடுபடுத்தியதற்கு பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.