வீட்டில் டிவி வெடித்து தீ விபத்து: போலீசார் விசாரணை!

578பார்த்தது
தூத்துக்குடியில் செண்பகவல்லி என்பவரது வீட்டில் டிவி பெட்டி வெடித்து தீ விபத்து லேப்டாப், செல் போன், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் ஆவணங்கள் முற்றிலுமாக எரிந்து சேதமானது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

தூத்துக்குடி போல்பேட்டை கிழக்கு பகுதியில் தருமர் என்பவருக்கு சொந்தமான காம்பவுண்டில் செண்பகவல்லி என்பவர் பொறியியல் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் தனது மகள் சொர்ண மீனாவுடன் வசித்து வருகிறார்.

செண்பகவல்லி கூலி வேலைக்கு இன்று (செப் 21) சென்றுள்ள நிலையில், வீட்டில் தனியாக இருந்த சொர்ண மீனா தனது வீட்டில் இருந்த டிவியை ஆன் பண்ணி உள்ளார். அப்போது மின் கசிவு காரணமாக டிவி பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்து உள்ளது. இதைத் தொடர்ந்து மீனா சொர்ணம் அலறி அடித்தபடி வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார்.

டிவி வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டிலிருந்த வீட்டு உபயோக பொருட்கள், பீரோல் லேப்டாப், செல்போன் மற்றும் சான்றிதழ்கள், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. தீ விபத்தை தொடர்ந்து தகவல் அறிந்த வந்த தூத்துக்குடி நகர தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் முருகையா தலைமையிலான தீயணைப்பு துறையினர் தீ மேலும் அருகே உள்ள வீடுகளுக்கு பரவாமல் அணைத்தனர்.

இந்த தீ விபத்து தொடர்பாக வடபாகம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.