தூத்துக்குடி வ. உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் சமையல் எண்ணெய் கையாளுவதில் சாதனை படைத்துள்ளது.
இது தொடர்பாக துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்தியாவின் முன்னணி துறைமுகங்களில் ஒன்றான தென்பகுதியில் அமைந்துள்ள வ. உ. சிதம்பரனார் துறைமுகம் நிலக்கரி, சரக்குபெட்டகங்கள், சுண்ணாம்புக் கல், காற்றாலை இறகு மற்றும் அதன் உதிரிபாகங்கள், உரம், கட்டுமான பொருட்கள், பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் சமையல் எண்ணெய் ஆகிய சரக்குகளை சிறந்த முறையில் கையாண்டு வருகிறது.
துறைமுகத்தின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், சுமூகமாக வர்த்தகத்தை எளிதாக்கவும் சிறந்த முறையில் செயல்பட்டு வரும் வ. உ. சிதம்பரனார் துறைமுகம் சமையல் எண்ணெய் கையாளுவதில் ஈர்க்கத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது. வ. உ. சிதம்பரனார் துறைமுகம் இந்த நிதியாண்டு 2024-25 டிசம்பர் வரை 3,73,393 டன் சமையல் எண்ணெயை கையாண்டு (இதில் 2,97,132 டன் பாமாயில் மற்றும் 76,261 டன் சூரியகாந்தி எண்ணெய் அடங்கும்) இதற்கு முந்தைய நிதியாண்டு 2023-24 டிசம்பர் 2023 வரை கையாண்ட அளவான 3,09,229 டன்களை ஒப்பிடுகையில் 20.75 சதவிகிதம் அதிகமாக கையாண்டு சாதனை படைத்துள்ளது.