தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள உயர்தர மின் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த மாற்றுத்திறனாளியை போலீசார் உயிருடன் மீட்டனர். ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழ நம்பிபுரத்தைச் சேர்ந்த இரு கண் பார்வையற்ற முனியசாமி, வாழ்வாதாரத்திற்காக மானியக் கடன் வழங்காததைக் கண்டித்து இந்த மிரட்டலை விடுத்தார். தகவல் அறிந்த சிப்காட் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, உதவி ஆய்வாளர் ரத்தினவேல் பாண்டியன் பேச்சுவார்த்தை நடத்தி முனியசாமியை பத்திரமாக மீட்டனர். பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் தற்கொலை செய்து கொள்வதாக முனியசாமி எச்சரித்துள்ளார்.