தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று பிற்பகலில் விளையாட்டு மைதானம் அருகே செயல்படாத வகுப்பறை கட்டடத்தின் உள்பகுதியில் இருந்து புகை வந்ததை மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தனர். உடனடியாக தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு, ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுப்படுத்தப்பட்டது. இந்த தீ விபத்தில் பாடப்புத்தகங்கள், சீருடைகள், கணினிகள் உள்ளிட்ட சுமார் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. மின் இணைப்பில் ஏற்பட்ட பழுது காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.