தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் திட்டம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், டாஸ்மாக் ஊழியர்களை பயன்படுத்தக் கூடாது, மாறாக பார் நடத்தும் ஒப்பந்ததாரர்களை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள 123 டாஸ்மாக் கடைகளை அடைத்து, விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் சிப்காட் வளாகத்தில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் மதுரை மண்டல மேலாளர் இளவரசன், மாவட்ட மேலாளர் அய்யப்பன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.