திருச்சி மாநகரில் லாட்டரி விற்ற 20 பேர் சிக்கினர். 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களிடமிருந்து 5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் சொகுசு கார், இரண்டு வாகனங்கள், 10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் மற்றும் வெளிமாநில லாட்டரி விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களை பிடிக்க திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து நேற்று முன்தினம் (டிசம்பர் 25) நடந்த அதிரடி வேட்டையில் திருச்சி தொழிலதிபரும், திமுக பிரமுகருமான லாட்டரி அதிபர் எஸ். வி. ஆர். மனோகர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து நேற்று திருச்சி மாநகரில் கன்டோன்மென்ட், திருவரங்கம், கோட்டை, காந்தி மார்க்கெட், பாலக்கரை, தில்லை நகர், உறையூர், புத்தூர் ஆகிய பகுதிகளில் அந்தந்த சரக போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 20 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
இதில் உறையூர் பகுதியில் பிடிபட்ட செந்தில்குமாரன் என்பவரிடம் 4,92,100 ரூபாய் பணம் கட்டு கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் கைதானவர்களிடமிருந்து 10 செல்போன்கள், இரண்டு இரு சக்கர வாகனங்கள், ஒரு சொகுசு கார் மற்றும் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.